Pages

Tuesday, October 29, 2013

கவிதை

                   கவிதை


நதியில் மீனை கண்டேன்
காட்டினில் மானை கண்டேன்
அன்பே இரண்டையும் கண்டேன்
உன் கண்களில்!


ப்ரியமுடன்,
பாலா...

Saturday, October 19, 2013

நரேந்திர தாமோதர தாஸ் மோடி ?

நண்பர்களே நலம் விரும்பிகளே! இந்தப் பதிவை பார்த்து இவன் இம்மதக் கொள்கை உடையவன்,இந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்று எண்ண வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். மிகவும் பத்திரிக்கைச் செய்திகளினாலும் மற்றும் ஊடக பதிவுகளினாலும் ஏற்பட்ட தாக்கத்தை மட்டுமே பதிவிடுகிறேன், இது பதிவு என்று கூறுவதை விட ஒரு வினா என்றே கூறலாம்! முற்றிலும் இது ஒரு போற்றுதல் படலம் அல்ல! எங்கோ இருக்கும் ஒரு மாநிலத்தலைவரைப் பற்றி இன்று நான் எழுத காரணம் என்ன ?ஏன் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் ஒரு அரசியல் தலைவரை இப்படி முன்னிறுத்துகிறது? உண்மையில் ஒரு தலைமை பஞ்சம் இங்கு இருப்பதை உணர முடிகிறது!


கடந்த 10 மாதங்களில் தினமும் பத்திரிக்கையிலும் அல்லது சமூக வலைதளங்களிலும் ஒருவருடைய பெயர் மற்றும் புகைப்படம் அல்லது அவரை பற்றியான யூகச் செய்திகள் தவறாமல் இடம் பெற்று இருந்தது. இவர் இன்னது செய்தார் என்று ஒரு தரப்பும், இல்லை என்று மறுக்கும் மற்றொரு தரப்பும் என்று விவாதிக்கும் அளவுக்கு இந்தியாவின் மிக முக்கியப் பிரபலம் ஆனார். ஏன் போற்றுகின்றனர் ஒரு தரப்பினர்? மற்றொரு தரப்பினரோ கடுமையான வாதங்களை வைத்து ஏன் எதிர்க்கின்றனர்? நம் நாட்டில் ஒரு அரசியல் தலைவருக்கான தனி மனித போற்றுதலை நீண்ட நாட்களுக்குப் பிறகு காண முடிகிறது! குறிப்பாக இவரை பாராட்டும் தரப்பினர் கூறும் போது இந்த மாநிலத்தை நாட்டின் முதன்மை ஆக மாற்றியுள்ளார் என்று கூறுகின்றனர். எதிர்ப்பவர்களோ இவர் ஒரு மதத்தை சார்ந்தவர், மதசார்பற்றத் தன்மையை இவரிடம் காண முடியாது என்ற மிக நியாயமான எதார்த்தமான ஐயத்தை முன் வைக்கின்றனர்! ஊடகங்களில் எதிர்கட்சிக்கு எப்போதும் இருக்கும் ஆதரவை விட இம்முறை சற்று அதிகமாகவே உள்ளது. அதுவும் இவரை முன்னிறுத்தி ஊடகங்கள் தங்கள் பக்கங்களை நிரப்பிக் கொண்டனர்.




இன்றைய எதிர்கட்சியின் நாளைய பிரதமர் வேட்பாளர்! ஆம் இன்றைய ஊடகங்களில் தலைப்புச் செய்தி இவர் பெயர் தான்! 2014ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலுக்கு அறிவிக்கப்பட்ட முதல் பிரதமர் வேட்பாளர் இவர் தான்! ஆம் நரேந்திர மோடி தான் இப்போதைய'Indian Trend'. குஜராத் மாநிலம் வடநகர் என்னும் ஊரில் 1950ம் ஆண்டில் பிறந்தவர் தான் மோடி. ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் எனப்படும்RSS அமைப்பிலிருந்து வந்த அவர் . பின் தன் அரசியல் வாழ்கையை பாரதீய ஜனதா கட்சியில் இருந்து தொடங்கினார்! Political Science ல் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக குஜராத் மாநிலத்தின் முதல்-அமைச்சாரக பதவி வகித்து வருகிறார். ஜூன் 2013 ல் கோவா வில் நடந்த பிஜேபி தேசிய செயற்குழுவில் மோடி, அக்கட்சியின் தேர்தல் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டார். அடுத்து அவர் தான் பிரதமர் வேட்பாளர் என்று ஊடகங்களும் அரசியல் நோக்கர்களும் யூகித்த போது கடந்த வாரம் வெள்ளியன்று (​செப் 13, 2013) மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அக்கட்சி.


மோடி நல்லவரா? கெட்டவரா ? என்றெல்லாம் எனக்கு தெரியாது.ஆனால் பெரும்பாலான மக்கள் அவரிடம் எதோ எதிர்பார்கின்றனர்! இந்த நாட்டு மக்களுக்கு இன்றைய பிரதமர் யாரென்று தெரியாமல் இருக்கலாம் ஆனால் இவரை தெரியாமலிருக்க வாய்ப்பில்லை! இவர் இவ்வளவு பிரபலம் அடைந்ததற்கு காரணம் குஜராத், நாட்டின் முதன்மை மாநிலம் என்று பரப்பப்படும் விளம்பரங்கள் ! மற்றொரு காரணம் குஜராத் கலவரம்! நாளைய பிரதமர் என்று சொல்லும் இவரை எதிர்க்கும் சிலர் இன்றைய ஆட்சி நிலவரங்களை எழுத தவறுகின்றனர்! அதனாலேயே இவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது!

குஜராத் இன்றைய தேதியில் நம்பர் 1 மாநிலம் தான், ஏன் 2002 ல் கூட குஜராத் முதன்மை மாநிலம் தான் ! ஏதோ சாதாரண மாநிலத்தை முன்னேற்றியவர் போல் ஏன் இவரை மக்கள் போற்றுகின்றனரே? என்று எனக்கு சந்தேகம். அப்போது அவரை பற்றியும் அம்மாநிலத்தை பற்றியும் ஆராயத் தொடங்கிய போது கிடைத்த தகவல்கள் சில : ஆசியாவின் முதல் முறையாக சூரிய வெப்பம் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலையை சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவியுள்ளார்! இதன் மூலம் ஆண்டுக்கு சுமார்1.6 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கபடுவதாக புள்ளியியல் ஒன்று கூறுகிறது.அம்மாநிலத்தில் இவரால் செயல்படுத்தப்பட்ட நதிகள் இணைப்பு திட்டத்தால், கிராமங்களில் இருந்துநகரங்களுக்கு குடிபெயர்ந்து செல்பவர்கள் எண்ணிக்கை 30 சதவீதம் குறைந்துள்ளது என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது! முற்றிலும் பாலை நிலமான குஜராத்தின் விவசாயம் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களுடன் போட்டியிடுகிறது! இவையெல்லாம் 2001க்கு பின் ஏற்பட்ட மாற்றங்கள் என்று இந்திய புள்ளியியலே கூறுகிறது! நாட்டின் ஏற்றுமதி விகிதத்தில் 15% குஜராத்தின் பங்கு.28 மாநிலம் 7யூனியன் பிரதேசம் உள்ள இந்நாட்டில் இந்த சதவிகிதம் மிக அதிகம். தொழில் துறையிலும் அபார வளர்ச்சியை அம்மாநிலம் தொட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆக அம்மாநிலம் இவரால் ஒரு வகையில் வளர்ச்சி அடைந்திருப்பதை உணர முடிந்தது! ஒன்றுமே செய்யாமல் ஒரு மனிதரை மூன்று முறை முதல்வராக தேர்ந்தெடுக்க அம்மாநில மக்கள் ஒன்றும் முட்டாள் இல்லை என்பது விளங்கியது!



இன்றைய தேதியில் இந்தியாவின் முக்கியமான பிரபலம் என்றால் அதுமோடி தான்! 2012 ம் ஆண்டு டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிய பதிப்பில் மோடியை பற்றியான கட்டுரை இடம் பெற்றிருந்தது! அதன் அட்டையில் மோடியின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது, நம் நாட்டில் மிக குறைவான தலைவர்களுக்கு(காந்தி,வல்லபாய் படேல்,நேரு, இந்திரா காந்தி )கிடைத்த வெகுமதியாகும். சமீபத்திய பேட்டி ஒன்றில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், மோடியுடன் இணைந்து செயலாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார், மேலும் குஜராத்தின் திட்டங்கள் தன்னை கவர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்!



இப்படி இவரை பற்றியான நல்ல ஆதரவான கருத்துக்கள் ஒரு புறம் இருந்தாலும், குஜராத் கலவரம், கோத்ரா ரயில் எரிப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன! இப்படி எல்லா தலைவர்களுக்கும் ஏதேனும் ஏற்ற இறக்க தன்மைகள் இருக்கும். 2014 ம் ஆண்டோ அதற்கு முன்போ நாடு பொதுத் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.மக்கள் தங்கள் விரும்பிய கட்சிக்கு வாக்குகளை பதிவு செய்ய காத்திருக்கின்றனர்! இவரை முன்னிறுத்துவதற்கு பலர் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். இவரை எதிர்ப்பதா ? ஆதரிப்பதா? என்ற ஐயம் என்னை போன்ற பாமரனுக்கு தெரியவில்லை !

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது இன்று இவரைத் தவிர இங்கு வேறு எந்த மாற்று தலைவர்களும் இல்லை! இது ஒரு நிதர்சனமான உண்மை!

அப்படி ஏதேனும் மாற்று தலைவர்கள் இருந்தால் சொல்லுங்கள்?

காத்திருக்கிறேன் இந்தியாவின் விடியலை காண !

-பாமரக் குடிமகன்!