Pages

Thursday, July 27, 2017

விக்ரம் வேதா ஒரு பார்வை :-


                                     



ஓரம் போ  மற்றும் வ குவாட்டர் கட்டிங் போன்ற மொக்க படங்களாக கொடுத்த புஷ்கர்- காயத்திரி இருவரும் இணைந்து கணவன் மனைவி இயக்கத்தில் வெளிவந்த மூன்றாவது படம்தான் விக்ரம் வேதா .

   நீண்ட நாட்களுக்கு பிறகு என்னுடைய சொந்த ஊரான காரிமங்கலம் நகரில் ராமயா சினிமாவில் இந்த படத்தை பார்த்தேன் , இப்பொழுது இந்த ரம்யா திரையரங்கம் சிறப்பான இருக்கை  வசதிகளுடன் உள்ளது .

படத்திற்கு வருவோம்

விக்ரம் - மேடி  ( மாதவன் )
வேதா - விஜய் சேதுபதி
மற்றும் வரலக்ஷ்மி , ஷ்ரத்தா  
           
போலீஸ் டிரஸ் இல்லாத மாதவனும் ' 16 கொலை செய்த விஜய் சேதுபதியின் தெனாவட்டான நடிப்பும் படத்தின் ஆக சிறந்த பலம் . அதுவும் விஜய் சேதுபதி வாய்ஸ் மாடுலேஷன் இல் சார் ஒரு கத சொல்லட்டுமா என்று ஆரம்பிப்பது செம்ம கெத்து ,
 
      படத்தின் தலைப்பு குறிப்பிடுவதைப் போல, விக்ரமாதித்யன் - வேதாளம் கதைதான் படம். விக்ரமாதித்யன் வேதாளத்தை தனது தோளில் சுமந்துகொண்டு செல்லும்போது, வேதாளம் ஒரு புதிர் கதையைச் சொல்லி, அதற்கான விடையைக் கேட்கும். சரியான பதில் சொன்னவுடன் வேதாளம் பறந்து சென்றுவிடும்.   
 
  இங்கு ,
 
வேதாளம் - விஜய் சேதுபதி , விக்ரமாதித்தன் - மாதவன் ,
 
விக்ரம் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. கொடுங்குற்றவாளிகளை சுட்டுத்தள்ளும் ஒரு காவல்துறை அணியில் இருக்கிறார். வேதா என்ற 14 கொலைகளைச் செய்த கேங்ஸ்டரை சுட்டுத்தள்ள முடிவுசெய்கிறது அந்த அணி. இந்த நிலையில் தானே முன்வந்து சரணடையும் வேதா, ஜாமீன் பெற்று வெளியேறுகிறான்.
 
வேதா தானாக முன்வந்து சரணடைந்தது ஏன் என்ற கேள்விக்கு பதிலைத் தேட ஆரம்பிக்கிறான் விக்ரம். இப்படி பல முறை விக்ரமின் கையில் சிக்கும் வேதா ஒவ்வொரு முறையும் ஒரு புதிரை முன்வைக்கிறார். அந்தப் புதிருக்கான விடையை அடையும்போது, வேறு ஒரு புதிர்
 
சாதாரண த்ரில்லர்தான். ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி VS குற்றக்கும்பல் தலைவன் என்று மிகச் சாதாரணமாகத்தான் துவங்குகிறது படம். ஆனால், சற்று அவசரப்படாமல் கவனித்தால் பல ஆச்சரியங்களை ரசிகர்களுக்கு பரிசளிக்கிறது இந்தப் படம். கடைசிக் காட்சி வரைக்கும் இந்த ஆச்சரியத்தைத் தக்கவைத்திருக்கிறார்கள்.
 
படத்தின் துவக்கத்தில் விக்ரம், ஓடாமல் இருக்கும் ஒரு பழைய புல்லட் வாகனத்தை சரி செய்ய ஆரம்பிக்கிறார். படம் நெடுக உதிரி பாகங்களுக்காக அலைகிறார். ஒவ்வொரு பாகமாகக் கிடைக்கிறது. புல்லட் முழுவதுமாக தயாராகும்போது, படம் உச்சகட்டத்தை எட்டுகிறது. இது போன்ற ரசிக்கத்தக்க காட்சிகள் படம் நெடுக இருக்கின்றன.
 
எப்போதுமே நீதியின் பக்கம் நிற்கும் விக்ரமே கதையின் நாயகனைப்போலத் தோன்றினாலும், படம் நகர நகர படத்தை முழுவதுமாக ஆக்கிரமிக்கிறது வேதாவின் பாத்திரம். அந்தப் பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் விஜய் சேதுபதி. கையில் ஒரு வடையை வைத்தபடி மிக சாவதானமாக காவல்துறையிடம் சரணடையும் துவக்கக் காட்சியிலேயே படத்தின் கவனத்தை அவர் மீது திருப்பிவிடுகிறார். எங்கேயுமே உறுத்தலில்லாத, மிகை நடிப்பில்லாத விஜய் சேதுபதி ஆக பெரிய பலம் .
 
பெண் பாத்திரங்களாக வரும் ஷ்ரத்தா, வரலட்சுமி ஆகியோரின் பாத்திரங்கள் சவாலானவையல்ல. தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். திரைக்கதைக்கு அடுத்தபடியாக இந்தப் படத்தின் மிக முக்கியமான பலங்கள், ஒளிப்பதிவும் பின்னணி இசையும். சற்றே இருண்மை படிந்த இந்தக் கதைக்கு உரிய நியாயத்தைச் செய்கிறது வினோத்தின் ஒளிப்பதிவு. அதேபோல சாமின் பின்னணி இசை, படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்துகிறது.
 
அதுவும் படத்தில் புரோட்டா எப்படி சாப்பிடுவது என்று கிளாஸ் எடுக்கும் வேதா செம்ம , படம் பார்த்தவர்கள் இனிமே புரோட்டா சாப்பிடும் பொது நிச்சயமாக விஜய் சேதுபதியின் நினைவு வரும் . படத்தின் வசனங்கள் பெரிய பலம் .
 
 
வித்தியாசமான கதை  மீது நம்பிக்கை வைத்து  ரசிகர்களை நம்பி எடுத்த புஷ்கர் காயத்திரி தம்பதிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 
 
   ஜி எஸ் டி  பிரச்சினையில் தியேட்டர்  நிறைகிறது என்றால் அது விஜய் சேதுபதி மேஜிக்  தான் முழு முதல் காரணமாக இருக்கும் 
 
 

நன்றிகளுடன்,

பாலசுப்ரமணியன்.சி 

காரிமங்கலம் 

தர்மபுரி - 635111

+91 9965818701